காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான், சீனாவை கடுமையாக கண்டித்துள்ளது இந்தியா.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாளையொட்டி, காஷ்மீர் பிரச்சினை பற்றி விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தை அதில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் சீனா நேற்று முன்தினம் கூட்டி இருந்தது. காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டதை சர்வதேச பிரச்சினை ஆக்கும் நோக்கத்தில் சீனா இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்னையை எழுப்ப முயன்றது. அதற்கு சீனா ஆதரவு தெரிவித்தது. ஆனால் பாதுகாப்பு சபையில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட மற்ற உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சீனா, பாகிஸ்தானின் இந்த கூட்டு முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்தத் தகவலை ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் பிரதிநிதி கிளப்ப முயன்ற போது மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் சிம்லா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டியும், இது இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னை என்று கூறியும் விவாதிக்க மறுத்துவிட்டதாக அதில் அவர் கூறி உள்ளார். காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினை ஆகும் பாகிஸ்தானின் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்து இருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது அதில் " இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுவதை உறுதியாக நிராகரிக்கிறோம். காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம் நடத்துவதற்கான முயற்சியை சீனா முன்னெடுத்து உள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை குறித்து இவ்வாறு விவாதம் நடத்த சீனா முயற்சி மேற்கொள்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் இது தொடர்பாக அந்த நாடு மேற்கொண்ட முயற்சிகளுக்கு சர்வதேச சமுதாயத்தின் ஆதரவு கிடைக்கவில்லை. இப்போதும் அதுபோல்தான் நடந்து உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா மூக்கை நுழைப்பதை உறுதியாக நிராகரிக்கிறோம். எனவே இத்தகைய முயற்சிகளை சீனா கைவிடவேண்டும். மேலும் தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் நிதி அளிப்பதையும் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளது.