ரீவைண்ட் 2020: டெல்லி வன்முறை முதல் 'லவ் ஜிஹாத்' வரை பரபரக்கவைத்த இந்திய அரசியல்!

ரீவைண்ட் 2020: டெல்லி வன்முறை முதல் 'லவ் ஜிஹாத்' வரை பரபரக்கவைத்த இந்திய அரசியல்!
ரீவைண்ட் 2020: டெல்லி வன்முறை முதல் 'லவ் ஜிஹாத்' வரை பரபரக்கவைத்த இந்திய அரசியல்!
Published on

2020 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும்


மணி நேரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த ஆண்டு உலகம் முழுவதும் பலருக்கும் பல புதுவிதமான அனுபவங்களை கொடுத்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் பூமிப் பந்தின் சுழற்சியை அப்படியே PAUSE செய்துவிட்டது. இப்போதுதான் மெதுவாக மீண்டும் பழைய வேகத்திற்கு சுழல ஆரம்பித்துள்ளது பூமிப் பந்து. இந்நிலையில், இந்தியாவை ஆட்டி படைத்து பரபரக்கவைத்த அரசியல் விவகாரங்களை அலசுவோம்…

வேளாண் சட்டங்கள்: கடந்த செப்டம்பரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் புதிய வேளாண் சட்ட மசோதாவை நிறைவேற்றவியது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு. அரசின் மசோதாவை கிழித்தெறிந்ததோடு மாநிலங்களவை சபாநாயகரின் மைக்கை பறித்த நிகழ்வுகளும்  நடந்தன. இருப்பினும் குரல் வாக்கெடுப்பின் மூலம் இரு அவைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

“இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை எளிதில் விற்கலாம்” என்றது ஆளும் அரசு. “இது விவசாயிகளுக்கு எதிரான மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டம்” என விமர்சித்தது எதிர் தரப்பு. மேலும் இதை திரும்ப பெற சொல்லியும் வலியுறுத்தியது. இருப்பினும் எதிர்க் கட்சியினர் விவசாயிகளை தவறான வழியில் வழி நடத்துகின்றனர் என சொல்லியது மத்திய அரசு. 

டெல்லி வன்முறை: மத்திய அரசு அறிமுகம் செய்து பெருத்த சர்ச்சைக்கு உள்ளான குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் வன்முறை வெடித்தது. இதில் சுமார் 53 பேர் உயிரிழந்ததோடு, 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். வாகனங்களும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. சில இடங்களில் அதற்கு தீயிட்டு கொளுத்தும் சம்பவங்களும் அரங்கேறின. தலைநகரம் போர்க் களமாக மாறி இருந்தது. அதனை களைய அரசு சார்பில் பெருந்திரளான கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது. மீறுபவர்கள் மீது தற்காப்பு படையினர் லத்தி சார்ஜ் செய்தும், கண்ணீர் புகை குண்டும் வீசினர். அடுத்த சில நாட்களில்  இது அரசியல் ரீதியான விமர்சனமாக மாறியது. 

“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியை இதற்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும்” என சொல்லியிருந்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. “எந்தக் கட்சி மீதும் குற்றம்சாட்ட காங்கிரஸுக்கு உரிமை இல்லை. முதலில் உங்களது ரெக்கார்டை பாருங்கள்” என சொல்லி இருந்தார் அமித் ஷா. அரசியல் ரீதியிலான ஆதாயம் தேட கலவரத்தை பயன்படுத்துவது தவறு எனவும் சோனியா காந்திக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர் மத்திய அமைச்சர்கள். 

நடிகை கங்கனா ரனாவத் VS மகாராஷ்ட்டிரா அரசு: சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்வதில் பெயர்போனவர் நடிகை கங்கனா ரனாவத். மும்பையை “மினி பாகிஸ்தான்” என்று சொல்லி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதன் காரணமாக மகாராஷ்ட்டிராவின் பல்வேறு அரசியல் கட்சியினரும், ஆளும் சிவசேனா அரசும் அவரை கடுமையாக எதிர்த்ததோடு ‘மும்பைக்கு வரவேண்டாம்’ என சொல்லியது.

மேலும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கை கையாளும் மும்பை போலீசார் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என அவர் சொல்லியிருந்தார். மகாராஷ்ட்டிரா அரசு கங்கனாவுக்கு சொந்தமான கட்டிடத்தை விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக சொல்லி மாநகராட்சி மூலம் இடித்தது “நான் மும்பைக்கு வருவேன், முடிந்தால் தடுத்துப்பாருங்கள்” என்று கங்கனா ரனாவத் சவால் விட அவருக்கு Z பிளஸ் பாதுகாப்பு கொடுத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியது பாஜக.

இந்தியா - சீனா மோதல்: லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே  ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த சுமார் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சுமார் 76க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். கடந்த 1975 முதலே இந்த எல்லை பிரச்சனை நிகழ்ந்து வந்தாலும் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதல் இருநாடுகளுக்கும் இடையே போர்ச் சூழலை உருவாக்கியது. இந்நிலையில் இதனை அரசியல் ரீதியாக விமர்சித்திருந்தார் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி. 

“சீனாவின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மோடி சரண் அடைந்துவிட்டார்” என ராகுல் காந்தி சாடியிருந்தார். அதற்கு பாஜகவினர் கடுமையான கண்டங்களை தெரிவித்ததோடு “வரலாறு தெரியாமல் பேச வேண்டாம், இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்” என பதிலடி கொடுத்தனர். “1996 மற்றும் 2005 இருநாட்டு உடன்படிக்கையின் படி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை” என ராகுலுக்கு சொல்லியிருந்தார் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

ராமர் கோவில் பூமி பூஜை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும் இந்த விழாவில் பாஜகவின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். “வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி, ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது” என்றார் மோடி. 

‘கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்த பூமி பூஜை விழா அவசியம் தானா?’ என கேள்வி எழுப்பியிருந்தார் தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான வகையில் செயல்படமாட்டேன் என உறுதி ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி அதற்கு எதிராக மத ரீதியிலான நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் என சாடியிருந்தார் ஹைதராபாத் மக்களவை தொகுதியின் உறுப்பினர் ஒவைசி.

ஹத்ராஸ் பாலியல் வழக்கு:  கடந்த செப்டம்பர் மாதம் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில்  பட்டியலினத்தைச்  சேர்ந்த 19 வயது பெண்ணை, ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். அதில் இளம்பெண் இறந்துபோன நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நள்ளிரவுக்கு  பின்னர் உத்தரப் பிரதேச போலீசார் எரியூட்டியது பலத்த கேள்விகளை எழுப்பியது. மேலும் பத்திரிகை, ஊடகம் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த நபர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை சந்திக்கவும் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இது அரசியல் ரீதியாக விமர்சங்களாகவும் முன்னெடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ இளம்பெண் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

லவ் ஜிஹாத் சட்டம்: உத்தரப் பிரதேச அரசு அண்மையில் மதமாற்ற தடை சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டம் மூலமாக லவ் ஜிஹாத் எனும் பெயரில் கட்டாயத் திருமணம் செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனை மற்றும் பிணையில் வெளிவரமுடியாத வகையில் சிறையில் அடைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்காக மட்டுமே மத மாற்றம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அடிப்படையில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் 'லவ் ஜிஹாத்'-க்கு எதிராக சட்டம் இயற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன அந்த மாநிலங்களை ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் அரசுகள்.

இந்நிலையில் இது பாஜகவின் அரசியல் அஜெண்டாவில் ஒன்று என எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. “திருமணம் என்பது தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. அதனைத் தடுக்க சட்டம் இயற்றுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, எந்த நீதிமன்றமும் இதை ஏற்காது. காதலில் ஜிஹாத்திற்கு இடமில்லை. லவ்ஜிஹாத் என்பது நாட்டைப் பிளவுபடுத்தவும், சமூக நல்லிணக்கத்தை சிதைக்கவும் பாஜக உருவாக்கிய வார்த்தை” என லவ் ஜிஹாத்திற்கு எதிரான சட்டம் குறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்திருந்தார்.

பால்கர் வன்முறை: மகாராஷ்ட்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கிடிஞ்சலே கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இரண்டு சாது (துறவி) மற்றும் ஒரு ஓட்டுநரை தாக்கியதில் மூவரும் உயிரிழந்தனர். அவர்கள் மூவரும் கிராமத்தில் உள்ள குழந்தைகளை கடத்தி கொண்டு செல்லும் கடத்தல்காரர்கள் என கருதி இந்தத் தாக்குதலை கிராம மக்கள் மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் அரங்கேறியது. சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் இருந்தது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு மத சாயம் பூச வேண்டாம் என ஆளும் சிவ சேனா அரசு கேட்டுக் கொண்டது. இந்தச் சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தது. 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இன்னல்கள்: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது இந்திய அரசு. இதில் மக்கள் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இன்னல் அடைந்தனர். இருப்பினும் புலம்பெயர்ந்து மாநிலம் விட்டு மாநிலம் வந்து தொழில் செய்த மக்கள் எதிர்கொண்ட நிலையை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. அந்த வலி கொடிதினும் கொடிது. போக்குவரத்து வசதி இல்லாமல் பலர் நீண்ட கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றது கண்களை பனித்தன. சிலர் நீரும், உணவும் கிடைக்காமல் உயிரிழந்த கொடூரங்களும் அரங்கேறின. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி கடுமையாக இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்தது. “இந்த மக்கள் மீது மோடி அரசுக்கு துளி கூட அக்கறை இல்லை” என விமர்சித்திருந்தார் ராகுல் காந்தி . 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் டிஜிட்டல் ஊடகம்:  நவம்பர் மாதத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் திரைப்படங்கள் மற்றும் செய்தி உள்ளடக்கம் கொண்ட ஆன்லைன் டிஜிட்டல் ஊடகங்களைக் கொண்டுவருவதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைகளின் கன்டென்ட் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் என சொல்லப்பட்டது. 

எதிர்வரும் நாட்களில் பல விமர்சங்களை அரசு மீது இந்த ஆன்லைன் ஊடகங்கள் ஏற்படுத்தலாம் என்ற நோக்கில் இந்த வெளியிட்டது அரசு. இதற்கு சமூக வலைத்தள பயனர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். 

- எல்லுச்சாமி கார்த்திக் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com