ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 73 வயது நபர் உயிரிழந்ததை அடுத்து, இந்தியா முதல் ஒமைக்ரான் உயிரிழப்பை பதிவுசெய்துள்ளது.
இந்தியாவில் கடந்த 20 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மறுபுறம் ஒமைக்ரான் பாதிப்பும் அதிகளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 73 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்தியா ஒமைக்ரான் தொற்றால் முதல் உயிரிழப்பை பதிவுசெய்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தொற்று பாதிக்கப்பட்டநிலையில், அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்ஷன், ஹைப்போ தைராய்டு உள்ளிட்ட இணை நோய்களும் இருந்துள்ளன. தொற்று பாதிக்கப்பட்டதை அடுத்து, மரபணு வரிசைப்படுத்தலுக்காக சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதேநேரத்தில் கடந்த 21-ம் தேதி மீண்டும் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது.
அந்த முதியவர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியதுடன், அவர் வெளிநாட்டு தொடர்புகள் எதுவுமின்றி இருந்துள்ளார். அவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதித்துள்ளதாக, கடந்த மாதம் 25-ம் தேதி ஆய்வு முடிவு வந்தநிலையில், நிமோனியா காய்ச்சலால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 31-ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.