இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.17 லட்சமாக உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1.42 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,17,353 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,42,91,917 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் 1,185 பேர் கோரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,74,308 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் 1.84 லட்சம், நேற்று 2 லட்சம் ஆக இருந்த பாதிப்பு இன்று 2.17 லட்சமாக அதிரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 1,18,302 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,25,47,866 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 88.31% ஆகும். அதேபோல் உயிரிழந்தோர் விகிதம் 1.23% ஆகும். நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,69,743ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 97,866 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.