கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்த மக்களின் தலையில் அடுத்த இடியாக வந்து விழுந்திருக்கிறது இன்ஃப்ளூயன்சா காய்ச்சல். இதுகாறும் இந்தியாவில் 90 பேர் இந்த இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக இருவர் பலியானதாக அறிவிக்கப்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக மக்கள் சிகிச்சை வரும் வேளையில், அதில் சிலருக்கு H3N2 வகையை சேர்ந்த இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனை ஹாங்காங் காய்ச்சல் என்றும் கூறுகிறார்கள்.
ஜனவரி மாதத்திலிருந்தே வைரஸ் காய்ச்சலுக்கு மக்கள் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் இது மார்ச் இறுதிக்குள் குறையும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. இந்த நிலையில்தான் கர்நாடகாவைச் சேர்ந்த 82 வயது முதியவரும், ஹரியானாவைச் சேர்ந்த 56 வயது முதியவரும் இந்த இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்களும். இருவருக்குமே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் புற்றுநோய் முறையே பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
சாதாரண காய்ச்சலாகவோ, கொரோனாவின் மற்றொமொரு திரிபாக இருக்குமோ என எண்ணிக்கொண்டிருந்த நிலையில் இந்த H3N2 வகை ஃப்ளூ காய்ச்சலுக்கு இருவர் பலியானது மக்களை சற்று கலக்கமடையச் செய்திருக்கிறது.
H3N2 வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள்:
இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் பிரதான அறிகுறிகளாக இருக்கின்றன. மேலும் தொண்டைப்புண், உடல் வலி, வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, மயக்கம் ஆகியவையும் ஏற்படுகிறது.
தொற்று தாக்காமல் தடுக்கும் முறைகள்:
கொரோனா பரவலின் போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து தடுப்பு முறைகளையும் இந்த வகை வைரஸ் காய்ச்சலுக்கும் கடைப்பிடிக்க வேண்டும். முறையாக கைகளை கழுவி, மாஸ்க் அணிந்து, பொது இடங்களில் கூட்டத்தில் இணையாமல் தனிமைப்படுத்துதால் அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.
இதனிடையே, H3N2 வகை வைரஸ் காய்ச்சல் பரவும் நிலையில் நாட்டில் பல இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஒருசேர அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
அதன்படி சனிக்கிழமையான நேற்று (மார்ச் 11) மட்டும் நாட்டில் புதிதாக 456 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதாம். ஆகையால் சுதாரித்துக் கொண்ட மத்திய அரசு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் காய்ச்சல் பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறதாம்.