இந்தியாவிலுள்ள அணுமின் நிலையங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேவையான யுரேனியத்தை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 22 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் புதிதாக 21 அணு உலைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அணு உலைகளுக்கு யுரேனியம் தட்டுப்பாடு ஏற்பட்டு, மின்உற்பத்தி தடை பட கூடாது என்பதற்காக மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டது. இதில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேவையான யுரேனியத்தை உலக நாடுகளிடம் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக உஸ்பெகிஸ்தானுடன், இந்தியா தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்தியப் பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் அதிபருடன் யுரேனியம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் இருந்தும் யுரேனியம் பெறுவதற்காக, அந்நாட்டு யுரேனியத்தை இந்தியா பரிசோதித்து வருகிறது.