இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பூமிக்கு அடியில் குழாய்கள் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
பீகாரின் கெகுசராய் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரியில் இருந்து தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள அமலேககன்ஜ் என்ற பகுதி வரை சுமார் 69 கிலோ மீட்டர் தொலைவில் பெட்ரோல் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் விரைவுபடுத்தப்பட்ட நிலையில், பெட்ரோல் அனுப்பும் சோதனை ஓட்டம் கடந்த ஜூலை மாதம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி மூலம் குழாய்கள் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். காணொலி மூலம் இணைந்திருந்த நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தங்கள் பகுதிக்கான திட்டத்தை தொடங்கிவைத்தார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் நல்லுறவு மேலும் வலுப்பெறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இத்திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை காண விரைவில் நேபாளம் வருவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.