இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அங்கு நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது கடந்த ஒன்றாம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “ இஸ்ரேல் - ஈரான் இடையில் வெடித்துள்ள மோதல்களால், பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அங்கு நிலவும் சூழல் கவலையடைய வைத்துள்ளது. இருதரப்பும் மோதல் போக்கை விடுத்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். இஸ்ரேலில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்குள்ள இந்திய சமூகத்தினருடன், இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளது