மத்தியில் ஆளும் பாஜக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க தேசிய அளவில் பல தலைவர்கள் முனைப்பு காட்டி இருந்தாலும், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் முயற்சியில் எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்த முன் வந்தன.
பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 21 ஆம் தேதி எதிர்கட்சிகள் ஒன்று கூடி தங்களது முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமையேற்றது.
முதல் கூட்டத்திற்கு 16 எதிர்கட்சிகள் வந்திருந்த நிலையில் பெங்களூருவில் நடந்த இரண்டாம் கூட்டத்திற்கு 26 எதிர்கட்சிகள் வந்திருந்தன. இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA எனும் பெயர் வைக்கப்பட்டது.
இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்க கூட்டணி என கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டது. இது எதிர்கட்சிகளின் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும் ஆளும் கூட்டணி மத்தியில் இந்த பெயர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியின் தலைவர்கள் எதிர்கட்சித் தலைவர்கள் குறித்தும் அவர்களது கூட்டணி குறித்தும் கடுமையான விமர்சங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுபோன்ற நோக்கங்களற்ற எதிர்கட்சிகளை நான் பார்த்ததில்லை என பிரதமர் பாஜக நாடாளுமன்ற வாராந்திர கூட்டத்தில் கூறியதாக பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
“இந்தியா எனும் பெயருக்காக எதிர்கட்சிகள் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்கிறார்கள். இந்திய தேசிய காங்கிரஸ், கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றின் பெயர்களிலும் இந்தியா உள்ளது. இந்தியா எனும் பெயரை பயன்படுத்துவதால் மட்டும் அர்த்தம் வந்துவிடாது” என்று பிரதமர் கூறியதாக பிரசாத் தெரிவித்தார். மேலும் நாட்டின் பெயரைப் பயன்படுத்தி மக்களை தவறாக வழி நடத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
ரவிசங்கர் பிரசாத்தின் கருத்தை ஒட்டியே பாஜகவின் வாராந்திர நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் இந்தியா கூட்டணி குறித்து பேசியதாக எம்.பி. ரமேஷ் பிதுரி, எம்.பி. நிஷிகண்ட் துபே, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், எதிர்கட்சிகள் நீண்ட காலமாக எதிர்கட்சிகளாகவே இருக்க முடிவு செய்துள்ளதாக பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக தெரிவித்தார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஷோபா ஓசா கூறுகையில், “கிழக்கிந்திய கம்பெனியின் பெயரில் இந்தியா இருந்ததை பிரதமர் உணர்ந்துள்ளார். ஆனால் அவரே பல திட்டங்களுக்கு இந்தியா எனும் பெயரை சொல்லியுள்ளார். எதிர்கட்சிகள் எப்போது அந்த பெயரை தேர்ந்தெடுத்துள்ளதோ அப்போது தான் அவருக்கு பிரச்சனை” என தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் குரல்கொடுத்து வரும் நிலையில் நாடாளுமன்றம் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டும் முடங்கியும் வருகிறது. இதுகுறித்து விவாதிக்க தயார் என பாஜக தலைவர்கள் கூறி வந்தாலும் முதலில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அதன்பின்பே விவாதம் நடைபெற வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் ரவிசங்கர் பிரசாத், 2024 ஆம் ஆண்டு மக்கள் ஆதரவுடன் பாஜக வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.