இந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ‘பெஞ்ச்மார்க்கிங் இண்டியா’ஸ் பேமெண்ட் சிஸ்டம்ஸ்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் நிலவி வரும் பணப்பரிவர்த்தனை தொடர்பாக தகவல்கள் மற்றும் பிறநாடுகளில் நிலவும் பணப் பரிவர்த்தனை \குறித்த ஓப்பீடும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில்தான் மிகவும் குறைந்த அளவிலான பணம் ஏடிஎம்கள் மூலம் எடுக்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்தியாவில் 2017ஆம் ஆண்டினை ஓப்பிடும் போது 2019ஆம் ஆண்டில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவில் 2,22,300 ஏடிஎம்கள் இருந்தன. ஆனால் 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,21,703 ஆக குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 597 ஏடிஎம்கள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் ஏடிஎம்களில் பணம் சரியாக நிரப்பப்படாததும் ஏடிஎம் செயல்படுகள் குறைவதற்கான காரணம் என்று இந்த அறிக்கை கூறியுள்ளது. எனினும் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது புதிதாக ஏடிஎம்கள் அமைப்பதில் சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியா, 2ஆவது இடத்தில் உள்ளது. அதாவது 2012 முதல் 2017ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் ஏடிஎம்களின் வளர்ச்சி 14 சதவிகிதமாக இருந்துள்ளது. அதேசமயம் இந்தியாவின் மக்கள் தொகையுடன் கணக்கிடும் போது இந்தியாவின் ஏடிஎம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகதான் உள்ளது என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.