புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு இருக்கும் தொடர்பு குறித்தும், அந்த அமைப்பின் முகாம்கள் பாகிஸ்தானில் செயல்படுத்துவது குறித்தும் ஆதாரங்களை அந்நாட்டிடம் இந்தியா வழங்கியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் விமானப்படை தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை இந்தியா அழித்தது.
இதையடுத்து நேற்று காலை நமது எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலின் போது இந்திய விமானி தங்கள் வசம் பிடிபட்டதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் இந்தியாவிடம் தெரிவிக்காமல் இருந்தது.
இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசிப் கஃபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிடிபட்ட வீரரின் படத்தை வெளியிட்டு இருந்தார். அதில், இந்திய விமானி கைகளில் டீ கப்புடன் இருப்பதுபோல் இருந்தது. கூடவே, ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ராணுவ நடைமுறைகளின் படி அவர் சரியா நடத்தப்பட்டு வருவதாகவும் அசிப் கஃபூர் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைதான் சரியான தீர்வாக இருக்கும், போரால் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தினார். மேலும், “புல்வாமா தாக்குதல் பற்றி இந்தியா விசாரித்தால் ஒத்துழைப்பு தர தயார். இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பாகிஸ்தான் விரும்பவில்லை. அதேபோல், பயங்கரவாதிகளின் மண்ணாக இருக்கவும் பாகிஸ்தான் விரும்பவில்லை” என இம்ரான்கான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புல்வாமா தாகுதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு இருக்கும் தொடர்பு குறித்தும், அந்த அமைப்பின் முகாம்கள் பாகிஸ்தானில் செயல்படுத்துவது குறித்தும் ஆதாரங்களை அந்நாட்டிடம் இந்தியா வழங்கியுள்ளது.
இந்திய ராணுவ அமைப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக அழைக்கப்பட்ட பாகிஸ்தன் தூதரிடம் ஆதாரங்கள் வழங்கப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயங்கரவாதிகளின் கட்டமைப்பு இருப்பதை அந்தநாட்டு அரசியல் மற்றும் ராணுவத் தலைமைகள் தொடர்ந்து மறுத்து வருவதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான மண்ணிலிருந்து நடத்தப்படும் பயங்கரவாதச் செயலுக்கு அந்நாடு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பாகிஸ்தான் தூதரிடம் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை கூறியுள்ளது.