சுஷ்மா மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சுஷ்மா மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
சுஷ்மா மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
Published on

சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

67 வயதான சுஷ்மா ஸ்வராஜுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு தலைவரை நாடு இழந்து விட்டது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். சுஷ்மா ஸ்வராஜின் சேவைக்காக நாடு என்றும் அவரை நினைவு கூறும் எனவும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். சுஷ்மாவின் மரணம் நாட்டுக்கே பேரிழப்பு என்றும் தனக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பு என்றும் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இந்திய அரசியலில் ஒளி மிகுந்த ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்து விட்டதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். 

ஏழைகளின் வாழ்வு மேம்படுவதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என்றும் பிரதமர் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சுஷ்மா சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்ற வாதி, சிறந்த நிர்வாகி என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். இவர்கள் தவிர மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் சுஷ்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

சுஷ்மா ஸ்வராஜ் தனிச்சிறப்பு மிகுந்த அரசியல் தலைவர், நாடாளுமன்ற வாதி என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தவிர காங்கிரஸ் கட்சியின் பிற மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் உள்ளிட்டோரும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com