இந்திய நாடு குறிப்பிட்ட எந்தவொரு மதத்திற்கோ, ஜாதிக்கோ, மொழிக்கோ சொந்தமானது அல்லது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வீடில்லா ஏழைகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஜாதி, மதத்தை அடிப்படையாக வைத்து பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் அரசியல் செய்ததில்லை எனக் குறிப்பிட்டார். அத்துடன் வளர்ச்சி மற்றும் சேவை மனப்பான்மையை கருத்தில்கொண்டே பாஜக அரசியல் செய்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “ இந்து, முஸ்லிம், ஜெயின், கிறிஸ்தவர்.. ஏன்? இன்னும் பல மத மக்கள் என அனைவராலும் நேசிக்கப்படும் நாடாகவே இந்தியா உள்ளது. ஜாதி மதத்தை வைத்து பாஜக ஒருபோதும் அரசியல் செய்வதில்லை. மாறாக ஏழை மக்களின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டே அரசியல் செய்கிறோம். ஏனென்றால் ஏழை மக்கள் முஸ்லிம், ஜெயின், இந்து , கிறிஸ்தவர், தலித், பழங்குடியினர் என அனைத்து தரப்பிலும் இருக்கின்றனர். அதேபோன்று வளர்ச்சி பணிகளிலும் பாஜக ஒருபோதும் பாரபட்சம் காட்டாது.
வளர்ச்சியை முன்நிறுத்தி எங்களுடன் போட்டி போட முடியாதவர்கள், ஜாதி மற்றும் வகுப்புவாதத்தை வைத்து மக்களை அச்சுறுத்த முயல்கின்றனர். எங்களுக்கு வாக்களிக்கிறார்கள்.. வாக்களிக்கவில்லை.. அப்படியென்றெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. ஒட்டுமொத்த மக்களுக்காகவே உழைக்கிறோம்” என தெரிவித்தார்.