இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டி விட்டதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இன்று மாலை நிலவரப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை தேசிய அளவில் 3 லட்சத்து 438 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 97,648 பேர் பாதிப்புடன் மகாராஷ்டிரா தேசிய அளவில் முதலிடத்திலும், 40,698 பேர் பாதிப்புடன் தமிழகம் 2-வது இடத்திலும், 34,687 பேருடன் டெல்லி மூன்றாவது இடத்திலும் உள்ளது. நாள்தோறும் அதிகரித்து வரும் பாதிப்புகளால் இந்தியா உலகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரையில் 8,498 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுப்படாத நிலையில் மத்திய அரசு பொருளாதார பிரச்னைகளை சரி செய்யும் விதமாக அன்லாக் 1 என்ற பெயரில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. ஆனாலும் மகாராஷ்ட்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில் கொரோனா அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோர் சதவீதம் 49.47 ஆக அதிகரித்துள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 195 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.