இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 11 ஆயிரத்து 793-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 33 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11 ஆயிரத்து 574 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 8 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99 ஆயிரத்து 602 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து கொரோனா பரவல் உள்ள வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை பரிசோதனை செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் 2 சதவிகிதம் பேரை தேர்வு செய்து ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால், அவர்களின் ரத்த மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.