இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ரேசன் அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து நபர்களுக்கும் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள 11 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் இக்கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆக்ஸிஜன் டேங்கர்களின் பயண நேரத்தை குறைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். ஆக்ஸிஜனை கொண்டுச் செல்ல ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் கூறினார். ஒரு வழி பயண நேரத்தைக் குறைக்க வெற்று ஆக்ஸிஜன் டேங்கர்களும் விமானப்படையால் கொண்டு செல்லப்படுகின்றன என்றும் மோடி தெரிவித்தார். எந்தவொரு மாநிலத்திற்கும் செல்லக்கூடிய ஆக்ஸிஜன் டேங்கர்கள் தடுத்து நிறுத்தப்படாமல் அல்லது நடுவழியில் தவிக்காமல் இ்ருப்பதை ஒவ்வொரு மாநிலமும் உறுதி செய்திட வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உயர் மட்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்குமாறு நரேந்திர மோடி மாநில அரசுகளை வலியுறுத்தினார். இந்த கூட்டத்துக்குப் பின் மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு பிரதமரின் கரிப் கல்யாண் ஆன் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு தலா ஐந்து கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றனர். இதற்காக மத்திய அரசு 26,000 கோடி ரூபாய் செலவழிக்கும் என்றும் கூறினர்.