கிழக்கு லடாக் பகுதியிலிருந்து படைகளை கூடிய விரைவில் வாபஸ் பெற இந்தியாவும் சீனாவும் இணங்கியுள்ளன.
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் ஒரு லட்சம் படை வீரர்கள் குவிந்துள்ளதால் பதற்ற நிலை நீடிக்கிறது. சுமுக சூழலை ஏற்படுத்த இரு தரப்பும் ஏற்கனவே 8 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும் அதில் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் 9ஆவது சுற்று பேச்சுவார்த்தை சீன பகுதியில் இரு தரப்பு கமாண்டர்களுக்கு இடையில் சுமார் 16 மணி நேரம் நடைபெற்றது.
இதன் பின் நேற்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இரு நாட்டு எல்லையை ஒட்டிய பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தை நேர்மறையாகவும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மீண்டும் கூடிப் பேசவும் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.