இந்தியா, சீனா இடையே லடாக் எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில், சுமுகத் தீர்வு காண, இரு நாட்டு ராணுவமும் 7 ஆவது சுற்று பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகின்றன.
இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான 6 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது எல்லையில் பதற்றத்தை தணிக்க கூடுதலாக படைகளை அனுப்பி வைப்பதை இருநாடுகளும் பரஸ்பரம் நிறுத்திக் கொள்வது, இருநாட்டு உறவுகளில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், செப்டம்பர் 10 ஆம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் அமைதியை நிலைநாட்ட ஐந்து அம்ச உடன்பாட்டை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த உடன்பாட்டை விரைந்து அமல்படுத்துவது குறித்தும் 6 ஆவது சுற்று பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் அடுத்தக் கட்டமாக 7 ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகளில் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டினால் மட்டுமே, லடாக் எல்லையில் இருந்து இருநாடுகளும் படைகளை முழுமையாக வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.