கைகள், கற்களால் தாக்கிக் கொண்ட இந்திய - சீன வீரர்கள்: திடீர் மோதலால் எல்லையில் பதற்றம்

கைகள், கற்களால் தாக்கிக் கொண்ட இந்திய - சீன வீரர்கள்: திடீர் மோதலால் எல்லையில் பதற்றம்
கைகள், கற்களால் தாக்கிக் கொண்ட இந்திய - சீன வீரர்கள்: திடீர் மோதலால் எல்லையில் பதற்றம்
Published on

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன எல்லைகள் தொடர்பான பிரச்னை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. அங்கிருக்கும் பாங்கோங் த்சோ ஏரியில் சீன படையினர் அத்துமீறி நீர்வழி ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதாக செய்திகள் வெளிவந்தன. அத்துடன் அந்த ஏரியின் அருகே இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தங்களது வீரர்களை குவித்து வருவதாக கூறப்பட்டது. பின்னர் இந்திய ராணுவம் அங்கு படையினரை குவிக்க, இரு நாடுகள் இடையேயான பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து இரு நாடுகளின் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை ஜூன் 6ஆம் தேதி நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சீன ராணுவம் எல்லையில் குவிக்கப்பட்ட தங்கள் வீரர்களை திரும்பப் பெற்றதாக செய்திகள் வெளியாகின. எல்லையில் பதற்றம் குறைந்த நிலையில் நேற்று இரு நாடுகளிடையேயான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மேலும் சுமூகம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றிரவு கல்வான் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய - சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படாமல், இருதரப்பினரும் கைகளால் மற்றும் கற்கள் உள்ளிட்ட கிடைத்த ஆயுதங்களால் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது.

இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த இரண்டு வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த வீரர் பழனி என்பவரும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று சீன தரப்பிலிருந்து 5 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியாவும், சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் நுழைந்ததாக சீனாவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன. இந்த தாக்குதலால் கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் உடனே அவசர ஆலோசனை நடத்தினார் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங். பின்னர், எல்லையில் நடைபெற்ற மோதல் குறித்து பிரதமர் மோடியிடம் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய தரப்பில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி அறிவுரைகளை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com