பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில், எல்லை பதற்றம் தொடர்பாக பிரதமர் அலுவகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் விமானப்படையின் அத்துமீறல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்தார். அவர் பேசும்போது, பாகிஸ்தான் விமானம் அத்துமீறிய போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் விமானி காணவில்லை என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய வெளியுறுத்துறை செயலர் விஜய் கோகலே மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லையில் விமானப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
இன்று காலை எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அதேநேரம் இரண்டு இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. அத்துடன் ஒரு இந்திய விமானி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்திருந்தது. இந்தியா இதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மை இல்லை என இந்திய விமானப் படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.