கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், மருந்தின் தேவையை கருதி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்றுக்கு இதுதான் சரியான சிகிச்சைமுறை என்ற எந்த முடிவுகளும் இதுவரை எட்டப்படாத சூழ்நிலையில், ரெம்டெசிவிர் ஊசிமருந்து கொரோனா சிகிச்சையில் முக்கிய இடம்வகிக்கிறது.
இந்த ரெம்டெசிவிர் என்பது Broad- Spectrum Antiviral மருந்துகளில் ஒன்று. அதாவது எந்தவகையான வைரஸ் பாதிப்பாக இருந்தாலும் அதற்கு இந்த மருந்தை வைத்து சிகிச்சையளிக்கலாம். சமீபத்தில் மும்பை, மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆகவே அங்கு கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்கப்படுகிறது என்றும், எனவே போதுமான அளவில் மருந்து கிடைப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்துவந்தன.
ஆகவேதான் மும்பை, பூனே, நாசிக் போன்ற இடங்களில் இந்த மருந்து தேவையான அளவில் கிடைக்கவேண்டும் என மாநகராட்சி அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதனைத் தொடர்ந்து மத்திய அரசும் ரெம்டெசிவிர் மருந்து நிறுவனங்களை தொடர்புகொண்டு உற்பத்தியை அதிகரிக்குமாறு வலியுறுத்தி வருகிறது. எனவேதான் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.