பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓரியண்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி ஆகிய வங்கிகள் இணைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
10 பொதுதுறை வங்கிகளின் தலைவர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். இதில், பஞ்சாப் நேஷனல் பாங்க், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, யுனைடெட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓரியண்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி ஆகிய வங்கிகள் இணைக்கப்படும் என தெரிவித்தார். அதேபோல், “கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கிகள் இணைக்கப்படும். யுனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்படும். அத்துடன் இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகள் இணைக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசிய போது, “தொழில்துறையை ஊக்குவிக்க ஏற்கெனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வங்கிகளில் கடன்களை விரைந்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வங்கித் துறை சீர்திருத்தங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுத்துறை வங்கி நிர்வாகிகளை தேர்வு செய்வதில் அரசின் தலையீடு இருக்காது.
அரசின் நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக்கடன் ரூ7.90 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. ரூ1.21 லட்சம் கோடி வாராக்கடன் அரசின் முயற்சியால் வசூலிக்கப்பட்டுள்ளது. 8 வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. நாட்டில் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 14 லாபத்தில் இயங்குகின்றன. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள். நிர்வாக ரீதியற்ற தலைவர் அனைத்து வங்கிகளிலும் நியமிக்கப்பட வேண்டும்.
ரூ250 கோடிக்கு மேலான கடன்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். குறைந்த அளவிலான கடன்கள் வழங்குவது 20.5 சதவீதம் உயர்ந்துள்ளது. நீரவ் மோடி போன்ற வங்கி மோசடி பேர்வழிகள் இனி உருவாகமாட்டார்கள்” என்று கூறினார்.