பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் பிரமாண்டமான பாலத்தின் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
அசாமின் திப்ரூகர், திமோஜி ஆகிய நகரங்களுக்கு இடையே பிரம்மபுத்திர ஆற்றின் குறுக்கே 5 கிலோ மீட்டர் நீளத்தில் ஈரடுக்கு பாலம் கட்டப்பட்டு வருகிறது. 1997ஆம் ஆண்டு தேவகவுடா பிரதமராக இருந்தபோது இந்த ஈரடுக்கு பாலத்தின் பணிகளுக்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து 2002 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. இந்த பிரம்மாண்ட ஈரடுக்கு பாலத்தின் மேலடுக்கில் மூன்று தடங்கொண்ட சாலையும், கீழடுக்கில் இருவழி ரயில் பாதையும் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
நதியின் குறுக்கே வாகன போக்குவரத்து மற்றும் ரயில்பாதை இரண்டும் இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாலம், கட்டுமான பொறியியலின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த பாலத்தின் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இதையடுத்து வரும் டிசம்பர் மாதம் பாலம் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.