சர்வதேச அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியா 102-ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டிற்கான குறியீட்டில் பாகிஸ்தானை விட இந்தியா 8 புள்ளிகள் பின்னுக்கு சென்றிருப்பதும் GLOBAL HUNGER INDEX புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் 117 நாடுகளில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியா 102ஆவது இடத்தில் இருக்கிறது. தெற்காசிய நாடுகளில் பசியால் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியாதான் கடைசி இடத்துக்கு பின்தங்கி இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதுதவிர, வளரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் நாடுகளில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுக்கான குறியீட்டில் பிரேசில் 18ஆவது இடத்திலும், ரஷ்யா 22ஆவது இடத்திலும், தென்னாபிரிக்கா 59ஆவது இடத்திலும் உள்ளன.
பிரிக்ஸ் நாடுகளிலும் இந்தியாதான் கடைசி இடத்தில் இருக்கிறது. இலங்கை , பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றை ஒப்பிடும்போதும் இந்தியா கடைசி இடத்திலிருப்பதும் தெரியவந்துள்ளது. 2015ஆம் ஆண்டில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாகுறையில் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியா 93ஆவது இடத்தில் இருந்த நிலையில், நடப்பாண்டில் 102ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு நாட்டில் உள்ள மொத்த குழந்தைகளில், ஊட்டச்சத்து குறைபாடு, உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாதது உள்ளிட்ட காரணிகளைக் கொண்டு GLOBAL HUNGER INDEX கணக்கிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் படி பூஜ்ஜியம் பெறும் நாடு பசியின்மை கொண்ட நாடாக கருதப்படுகிறது. எண்கள் அதிகரிக்க, அதிகரிக்க அந்நாட்டில் பசியால் வாடுபவர்கள் அதிகம் இருப்பதாக கணக்கிடப்படுகிறது.