தோக்லாம் எல்லை பிரச்னையில் படைகளை வாபஸ் பெற இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளன.
தோக்லாம் எல்லைப் பகுதியிலிருந்து படைகளை வாபஸ் பெற இந்தியாவும் சீனாவும் இணங்கியுள்ளன. இதன் மூலம் 70 நாட்களுக்கு மேல் எல்லையில் நீடித்த பதற்ற நிலை முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. படைகளை திரும்பப் பெறுவதில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இரு தரப்பும் பேச உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தோக்லாம் பகுதியில் உள்ள சுமார் 350 ராணுவத்தினரை இந்தியா ஏற்கனவே திரும்பப் பெறத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிக்கிம் மாநிலத்தை ஒட்டியுள்ள தோக்லாம் எல்லைப் பகுதியில் சீனா சாலை அமைக்கத் தொடங்கியதை ஒட்டி இந்திய ராணுவம் கடந்த ஜூன் 16 ஆம் தேதி அங்கு குவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சீன ராணுவமும் குவிக்கப்பட்டது. இதனால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. அடுத்த வாரம் நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி சீன பிரதமரை சந்திக்க வாய்ப்புள்ள நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவை இரு தரப்பும் எடுத்துள்ளன.