நாட்டின் 73-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியிலும் மற்ற நகரங்களிலும் முன் எப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்ற உள்ள டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற தேசிய பாதுகாப்பு படையினரும் மற்ற கமாண்டோ படையினரும் செங்கோட்டையை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 20 ஆயிரம் காவல் துறையினரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செங்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் நடமாடுபவர்களின் முகங்கள் நவீன மென்பொருள் மூலம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள், பட்டியலுடன் ஒப்பிட்டு உடனுக்குடன் சரிபார்க்கப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து பதற்ற சூழல் நிலவுவதால் இம்முறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செங்கோட்டையை சுற்றிலும் அதிக திறன் வாய்ந்த 500 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரிலும் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப்பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது