சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது தேவசம் போர்டால் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, பம்பையில் இருந்து நீலி மலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் வழியுள்ள வனப்பாதை ஐயப்பன் பக்தர்களுக்காக திறக்கப்படும். நீலி மலையிலும், அப்பாச்சி மேட்டிலும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யும் சிறப்பு முகாம் அமைக்கப்படும்.
சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். இதற்காக சன்னிதானத்தில் 500 அறைகள் கோவிட் 19 நோய்த்தடுப்பு விதிமுறைகளின்படி தயார்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்கவும், பலி தர்ப்பணம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பம்பை ஆற்றின் நீர் வரத்திற்கு ஏற்ப பக்தர்கள் குளிப்பது, பலி தர்ப்பணம் செய்வது குறித்த விஷயத்தில பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அமைச்சர்கள் மற்றும், தேவஸ்வம் போர்டு நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.