ஜனநாயக உரிமையை நிலைநாட்ட 18வது மக்களவைத் தேர்தல் களம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரியைத் திரும்பச் செலுத்துவதில் 45 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸின் 4 வங்கிக்கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, தங்களின் நிதியை அரசு முடக்கப் பார்ப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. தற்போதும் இவ்விவகாரம் உலக அளவில் பேசுபொருளாகி வருகிறது.
இவ்விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், ”காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் அக்கட்சி தேர்தலில் முழுவீச்சில் பிரச்சாரம் செய்வது தடைபடும் சூழல் உருவாகியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். அனைத்துப் பிரச்னைகளுக்கும் நியாயமான, வெளிப்படையான, காலதாமதமின்றி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். மேலும், இவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கை குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால், இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமானவரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய நோட்டீஸ் ஆனது, சட்டவிரோதமானது மற்றும் ஜனநாயகமற்றது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பாஜகவின் கணக்கில் காட்டப்படாத ₹42 கோடி டெபாசிட்டுக்கு ₹4,600 கோடி அபராதம் தவிர்க்கப்பட்டது, அதே சமயம் காங்கிரஸின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களால் கொடுக்கப் பட்ட ₹14 லட்சம் ரொக்க டெபாசிட்டுகளுக்கு ₹135 கோடி அபராதம் கோரப்பட்டது!
எதிர்கட்சிகளுக்கு எதிராக மட்டும் இப்படி நியாயமற்ற முறையில் செயல்பட வருமான வரித்துறைக்கு அழுத்தம் கொடுப்பது யார்?
முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸைத் துன்புறுத்த ஐடி துறையை ஆயுதமாகப் பயன்படுத்த அனுமதிப்பது ஏன்!
ஐடி, இடி, சிபிஐ போன்ற நிறுவனங்களை ஜனநாயகத்தை குலைப்பதற்கும் அரசியலமைப்பை சிறுமைப்படுத்துவதற்கும் அவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.
இரண்டு உதாரணங்கள் -
தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 1823 கோடி ரூபாய் நோட்டீஸ் கொடுத்துள்ளது. அவர்கள் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் கணக்குகளில் இருந்து ₹135 கோடியை எடுத்துள்ளனர், இது மக்களின் நன்கொடை மூலம் நாங்கள் சேகரித்த நிதியாகும்.
ஆனால் பாஜகவுக்கு ஐடி எந்த நோட்டீஸ் கொடுக்கவில்லை.
தேர்தல் ஆணையத்தின் பொதுத் தகவல்கள் தெளிவாகக் காட்டினாலும், 2017-18 ஆம் ஆண்டில் 1297 பேர் தங்கள் பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிடாமல் ₹42 கோடியை பாஜகவிடம் டெபாசிட் செய்துள்ளனர்.
காங்கிரஸுக்கு ₹14 லட்சம் டெபாசிட்களுக்கு ₹135 கோடி அபராதம் விதிக்கப்பட்டு அதன் கணக்கு முடக்கப்பட்டது.
ஆனால் கடந்த 7 ஆண்டுகளில், பாஜகவுக்கு வந்த நன்கொடைக்கு அபராதம் ₹4,600 கோடி போடப் பட்டிருக்க வேண்டும்!
எங்களின் நேரடிக் கேள்வி பாஜகவுக்கு ஏன் இந்த அபராத விலக்கு?
லோக்சபா தேர்தலுக்கு முன், பல ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த தகவல் தொழில்நுட்ப நோட்டீஸ், தேர்தல் களத்தில் சமநிலையை குழைத்து கைப்பற்றும் பாஜகவின் சதியை நிரூபிக்கிறதா?
1993-94 - ₹54 கோடி அபராதம்
2016-17 - ₹182 கோடி அபராதம்
2017-18 - ₹179 கோடி அபராதம்
2018-19 - ₹918 கோடி அபராதம்
2019-20 - ₹490 கோடி அபராதம்
காங்கிரஸார் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள்!
நாங்கள் முழு பலத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம்.
பாஜகவின் சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டின் நிறுவனங்களை விடுவிப்போம்” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “1821 கோடி ரூபாய் காங்கிரஸ் கட்சிக்கு வருமானமே கிடையது, அரசியல் சாசன சட்டத்தில் அரசியல் கட்சிக்கு வருமான வரியே கிடையாது, ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கை காரணம் காட்டி தற்போது அபராதம் விதித்துள்ளனர்.
ஒரு அரசியல் கட்சியை முடக்குவதற்கு இதை விட சிறந்த வழி இருக்க முடியாது. இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் கால் பதித்த கட்சி காங்கிரஸ். மாநில கட்சிகளை சிதைத்து விட்டு தற்போது தேசிய கட்சிகளையும் முடக்க முயல்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
1823 கோடி வருமான வரியை செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டதற்கு எதிராகவும் 135 கோடி வலுக்கட்டாயமாக வருமான வரி துறை காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்ததற்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியதற்கு எதிராகவும் நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினருக்கு காங்கிரஸ் கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் மாநிலம் மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக இதுகுறித்து ராகுல் காந்தி, ”காங்கிரஸ் கட்சி மீது பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் குற்றவியல் நடவடிக்கையை எடுத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற கூற்று பொய்யாகியுள்ளது. தேர்தலில் தங்களை நிலைகுலைய வைக்கும் எண்ணத்தில், வேண்டுமென்றே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.