சரண கோஷங்கள் முழங்க மண்டல பூஜைக்காக இன்று அதிகாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தி கருவறையில் தீபம் ஏற்றினார்
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் ஏற்றினார்.
இதைத் தொடர்ந்து சபரிமலை புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகபுரம் மேல்சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு அபிஷேகம் மற்றும் பதவியேற்பு விழா நடந்தது. ஓராண்டு கால பூஜை முடிந்து, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நேற்று இரவு, 18 ஆம் படியில் இறங்கி ஐய்யப்பனிடம் இருந்து விடை பெற்றார்.
இதையடுத்து நவம்பர் 17 ஆம் தேதி (இன்று) முதல் சபரிமலை மற்றும் மாளிகைப் புறம் ஆகிய இரு கோவில்களையும் புதிய மேல்சாந்திகள் ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகபுரம் ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் திறந்தனர். இதைத் தொடர்ந்து இன்று (17 ஆம் தேதி) முதல் அடுத்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் வரை புதிய மேல்சாந்திகள் நடை திறந்து பூஜைகள் நடத்துவர்.
சபரிமலையில் மண்டல பூஜை நடை திறப்பை முன்னிட்டு திரளான பக்தர்கள் பெரிய நடை பந்தலில் குவிந்திருந்தனர். பக்தர்களின் ஒருமித்த சரண கோஷம் முழங்க புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து கருவறையில் தீபம் ஏற்றினார். இந்நிலையில், டிசம்பர் 27-ல் மண்டல பூஜையும், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறும். ஜனவரி 20 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காலம் நிறைவடைந்து நடை அடைக்கப்படும்.