உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சர் சுந்தர்லால் மருத்துவமனையில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் மூச்சுக்குழாயில் 25 பைசா நாணயமொன்று மாட்டிக்கொண்டுள்ளது. இவர் தனது 32 ஆவது வயதில் நாணயத்தை வாயில் வைத்து உறங்கியபோது, அதனை விழுங்கியுள்ளார். ஆனால் தற்போதுதான் அதை அறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுக்குழாயில் இருக்கும் நாணயத்தை அறுவைசிகிச்சையின் மூலம் எடுக்க தீர்மானித்துள்ளனர். இதற்காக, கார்டியோ - தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் சித்தார்த் லகோடியா மற்றும் பேராசிரியர் எஸ்.கே. மாத்தூர் தலைமையிலான மருத்துவர்கள் கொண்ட குழு கடந்த செவ்வாய் (02.07.2024) அன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு மூச்சுக்குழாயிலிருந்து நாணயத்தை நீக்கியுள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், ”பெரியவர்களுக்கு வலுவான இருமல் ரிஃப்ளெக்ஸ் இருப்பதால் அவர்களின் மூச்சுக்குழாய்களின் ஏதாவது பொருட்கள் நுழைவது மிகவும் அசாதரமாண ஒன்று. ஆனால், இந்த நபருக்கு கடந்த 8 ஆண்டுகளாக மூச்சுக்குழாயில் நாணயமொன்று தங்கியிருந்துள்ளது. இதனால் மூச்சுத்திணறல், நிமோனியா , நுரையீரல் சேதம், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.
இவருக்கு கிட்டதட்ட 20 நிமிடங்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நாணயம் நீக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து மயக்கவியல் துறையின் மருத்துவர் தெரிவிக்கையில், “இதுபோன்ற நடைமுறைகளுக்கு மிக உயர்ந்த துல்லியம் தேவைப்படுகிறது. சிறிய பிழை கூட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த நோயாளியை பொறுத்தவரை அவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அட்வான்ஸ்டு ரிங்கிங் ப்ரோன்கோஸ்கோப் என்ற மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது” என்றுள்ளார்.
இந்நிலையில், வெற்றிகரமாக இந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கூடிய விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ச் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.