உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் 8 போலீஸாரை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்படும் ரவுடி விகாஸ் துபே தனக்கு இரண்டு பாஜக எம்.எல்.ஏ.க்களை தெரியும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் அதிகரித்து வரும் ரவுடிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கான்பூரில் ரவுடி கும்பல் ஒன்றைச் சுற்றி வளைத்தபோது போலீசார் மீது ரவுடி கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர். 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ள இந்த சம்பவம் நடந்தது எப்படி? யாரை கைது செய்ய இந்த போலீஸ் படை சென்றது என தகவல் வெளியானது.
2001ம் ஆண்டு காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே பாஜகவின் முக்கிய பிரமுகரான அப்போதைய அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை சுட்டுக் கொன்றது ஒரு கும்பல். அந்தக் கொலையின் முக்கிய குற்றவாளி விகாஷ் துபே. 1993 ஆம் ஆண்டிலிருந்து விகாஷ் துபே பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். 8 போலீஸாரை சுட்டுக்கொன்ற விகாஷ் துவே தலைமையிலான கூலிப்படையை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில் விகாஷ் துபேவின் கூட்டாளி நேற்று கைது செய்யப்பட்டார்
இந்நிலையில் ரவுடி விகாஷ் துபே 2017 ஆம் ஆண்டு பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் அதிரடிப்படையினரால் விகாஷ் துபே கைது செய்யப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட வாக்கமூலத்தில் பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அபிஜித் சங்கா, பகவதி சாகர் ஆகியோர் தனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள் என கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோ குறித்து பாஜக எம்எல்ஏ அபிஜித் சங்கா கூறியது "என்னுடைய தொகுதியான பித்தூரில் இருக்கும் கிராமவாசிகள் என்னிடம் உதவி என வருவார்கள். அவர்களுக்காக விகாஷ் துபேவுக்கு எதிராக நானே பல முறை நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன். இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது" என தெரிவித்துள்ளார்.