திருப்பதி லட்டு குறித்து 'பரிதாபங்கள்' என்ற யூட்யூப் சேனலில் வீடியோ வெளியிட்ட, கோபி - சுதாகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆந்திர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மிருகங்களின் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக சர்ச்சை வெடித்தது. இந்த விஷயம் குறித்து, 'பரிதாபங்கள்' என்ற பிரபல யூட்யூப் சேனலில் கோபி - சுதாகர் ஜோடி, 'லட்டு பாவங்கள்' என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை அவர்கள் நீக்கிவிட்டனர். இதுபோன்று இனி நிகழாது என்று கூறி, மன்னிப்பும் கோரியிருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க.வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, ஆந்திரா காவல் துறை இயக்குநர் துவாரகா திருமலா ராவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.
அதில், இந்துக்களின் மனதை புண்படுத்தும்வகையிலும் வெறுப்பை பரப்பும் வகையிலும் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் வீடியோ அமைந்திருந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும், இந்துக்களின் உணர்வுகள் அவமதிக்கப் பட்டிருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மத அடிப்படையில் இரு தரப்புக்கு இடையே மோதலை தூண்டி விட முயன்றதாக வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் கோரப்பட்டுள்ளது.