397 ஆண்டுகளுக்குப் பின் டிசம்பர் 21 ஆம் தேதி வானில் நிகழவுள்ள அதிசயம்!

397 ஆண்டுகளுக்குப் பின் டிசம்பர் 21 ஆம் தேதி வானில் நிகழவுள்ள அதிசயம்!
397 ஆண்டுகளுக்குப் பின் டிசம்பர் 21 ஆம் தேதி வானில் நிகழவுள்ள அதிசயம்!
Published on

சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய கிரகங்களான வியாழனும், சனியும் 397 ஆண்டுகளுக்கு பின், மிக நெருக்கமாக வரும் அரிய வானியல் நிகழ்வு வரும் 21 ஆம் தேதி நிகழ்கிறது.

முடிவில்லாமல் விரிந்து கொண்டே செல்லும் இந்த பேரண்டத்தில் இருக்கும் ஆச்சரியங்களும் விரிந்து கொண்டே தான் இருக்கின்றன. பேரண்டத்தின் சிறு புள்ளியாய் இருக்கும் சூரிய குடும்பத்திலும் அவ்வப்போது வானியல் அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்படி கடைசியாக 1623 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு அதிசயம் சரியாக 397 ஆண்டுகளுக்குப் பின் வரும் 21 ஆம் தேதி மீண்டும் நிகழவுள்ளது.

அன்றைய மாலைப் பொழுதில் மேற்கு திசையை உற்று நோக்கினால் நட்சத்திரங்கள் போல பெரும் ஒளி புள்ளிகள் வானில் தென்படும். இரு கிரகங்கள் ஒரு பாகைக்கும் குறைவான தூரத்தில் மிக நெருக்கமாக வருவதே இந்த வானியல் அதிசயத்திற்கு காரணம். அந்த இரு கிரகங்களும் மக்களால் மிகவும் அறியபட்டவை தான். ஒன்று வியாழன், மற்றொன்று சனி.

இரு கிரகங்களும் ஏன் நெருக்கமாக வருகின்றன? 397 ஆண்டுகளுக்குப் பிறகு தான் அவை நெருங்கி வருகின்றனவா? போன்ற கேள்விகளுக்கு பதிலளித்த பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் செளந்தரராஜ பெருமாள்,

 “வரும் 21 ஆம் தேதி இரு கோள்களும் நெருங்கி வருகின்றன. வியாழன் பூமியில் இருந்து 88.6 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. சனி கோள் 162 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. இரு கோள்களுக்கும் இடைப்பட்ட தூரம் 73 கோடி கி.மீ. ஒரு டிகிரிக்கும் குறைவான தூரத்தில் இரு கோள்களும் வருகின்றன. பார்வை தூரத்தில் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல தெரியும். 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இரு கோள்களும் நெருங்கும். 397 ஆண்டுகளுக்குப் பின் ஒரு டிகிரிக்கும் குறைவாக நெருங்குகின்றன. அடுத்தாக வரும் 2080 ஆம் ஆண்டு இந்த வானியல் அதிசயம் நிகழும். தொலைநோக்கி மூலம் காணும்போது இரு கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல காண முடியும். வெறும் கண்களால் காணும்போது அவை பெரும் ஒளிப் புள்ளிகளாக தென்படும்” என்றார்.

வரும் 21 ஆம் தேதி வியாழனும், சனியும் நெருக்கமாக வரும் நிகழ்வு மட்டுமல்ல, அன்றைய தினம் எரி நட்சத்திரங்கள் பூமியை நோக்கி விழும் வானியல் ஜாலத்தையும் காண முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டின் நீண்ட இரவு கொண்ட நாளாகவும் 21 ஆம் தேதி அமையவுள்ளது. அதே நேரம் கிரகங்கள் நெருக்கமாக வருவதாலும், எரி நட்சத்திரங்கள் மழையாக பொழிவதாலும், பூமியின் வளி மண்டலத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது என்கின்றனர் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com