உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற செயல்பாடுகளை விமர்சித்த அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
மூத்த வழக்கறிஞரான பிரசாந்த பூஷண், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்திய நீதிமன்றம், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று அறிவித்ததுடன் தண்டனை விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தனது கருத்துக்கு பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை வலியுறுத்திய போதும், மன்னிப்பு கேட்க மனசாட்சி இடம்தரவில்லை என்றும் தண்டனைக்குத் தயார் என்றும் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்தார். பிரசாந்த் பூஷணை கண்டித்து, விட்டு விடலாம் என அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.
இந்த சூழலில், பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை, நாளை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.