கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்குவதைத் தவிர்த்தனர்.
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில், 119 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், 38 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் சுமார் 3,115 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 92,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு மக்களுக்கு உதாரணமாக மாறியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் , ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரின் கைகளுக்கு கிருமி நாசினி வழங்கினார். பின்னர் சக எம்பிக்கள் அங்கு திரள, கைகளை குலுக்குவதைத் தவிர்ப்பது குறித்தும் வணக்கம் வைப்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். அதே வேளையில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கைகளில் பாதுகாப்பு உறைகளை அணிந்திருந்தனர். சுயேச்சை உறுப்பினர் நவ்நீத் ரவி ரானா, மக்களவைக்கு முகக்கவசம் அணிந்தபடி வருகை தந்திருந்தார்.