பிரசவ கட்டணத்தை செலுத்த முடியாததால் பெற்றோரே தங்களது குழந்தையை 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்ற சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம் கேதிரபாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிராகர் மோஹரானா. கூலித் தொழிலாளியான இவர், தனது மனைவி கீதாஞ்சலியை கடந்த மாதம் 30 ஆம் தேதி பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அவருக்கு கடந்த 1 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து பிரசவக் கட்டணமாக 7 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது. தங்களிடம் பணம் இல்லாத தம்பதி, ஒரு தரகர் மூலம் குழந்தையை 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்றுள்ளனர். மருத்துவமனை நிர்வாகமே இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது.
இதனையடுத்து பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்ய மருத்துவமனை ஊழியர் கட்டாயப்படுத்தியதாக காவல்நிலையத்தில் அந்த பெற்றோர் புகார் அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விற்கப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை விற்றது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.