மகாராஷ்டிராவில் தரூர் என்ற பகுதியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த வேளையில், ரெயின் கோட் அணிந்தவாறு இரண்டு நபர்கள் கயிறுடன் ஏடிஎம்மில் நுழைந்தனர். பின்னர் ஏடிஎம் இயந்திரங்களில் கயிறை கட்டி, அதனை காருடன் இணைத்து இயக்கியுள்ளனர்.
இதனால் ஏடிஎம் இயந்திரங்கள் பெயர்ந்து வந்தன. மேலும் வந்த 2 கொள்ளையர்கள் உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரங்களை தூக்கிச் சென்றனர். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய காரை சுமார் 61 கிலோ மீட்டர் துரத்தி சென்று காவல்துறையினர் பிடித்த நிலையில், அதில் இருந்த 21 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றினர். இருப்பினும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.