கர்நாடகா ஹாசன் மாவட்டம் அரசிகெரே பகுதியில், கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவில், காரும் லாரியும் மோதியதில், ஒருவர் உயிரிழந்தது பற்றி காவல்துறையினர் விசாரித்தனர். காரின் பதிவெண்ணை வைத்து விசாரித்ததில், உயிரிழந்தது பெங்களூர் - ஹொஸ்கோட்டே பகுதியைச் சேர்ந்த முனிசாமி கவுடா என கருதினர். அவரது மனைவி ஷில்பா ராணியை வரவழைத்த விசாரித்ததில், உயிரிழந்தது, தனது கணவர்தான் என உடலைப் பார்த்து அடையாளம் காட்டினார்.
உடற்கூராய்வுக்கு பிறகு உடல் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், கழுத்து நெரிக்கப்பட்டதால் தான் உயிரிழப்பு நேர்ந்ததென உடற்கூராய்வில் கண்டறியப்பட்டது.
இதுஒருபுறம் இருக்க, 3 நாள்களுக்குப் பிறகு, முனிசாமியின் உறவினரும் சிட்லகட்டா காவல் ஆய்வாளருமான சீனிவாசன், முனிசாமியை நேரில் பார்த்துள்ளார். அதிர்ந்துபோன அவர், முனிசாமியிடம்கேட்டபோது, தொழிலில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக செய்து வைத்து காப்பீட்டுப் பணத்தை பெறுவதற்காக நாடகமாடியதாகக் கூறியுள்ளார்.
தன்னைப் போல தோற்றம் கொண்ட யாசகர் ஒருவரை தேடிப்பிடித்து, கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, உடலை காரில் வைத்து, லாரியால் மோதி விபத்து போல சித்தரித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, முனிசாமி - ஷில்பா தம்பதியை கைது செய்த காவல்துறையினர், அவர்களுக்கு உதவிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.