கர்நாடகாவில் அமைச்சர் ஈஸ்வரப்பா கமிஷன் தொகை கேட்டு தொல்லை தருவதாக குற்றஞ்சாட்டியிருந்த அரசு ஒப்பந்ததாரரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
பெலகாவி பகுதியை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தான் செய்த பணிகளுக்காக பணத்தை விடுவிக்க அமைச்சர் ஈஸ்வரப்பா கமிஷன் தொகை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார். இது குறித்துஅவர் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களிடமும் புகார் தெரிவித்திருந்தாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் காணாமல்போன சந்தோஷ் பாட்டீல் தனது செல்ஃபோன் மூலம் பத்திரிகையாளர்களுக்கு தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அமைச்சர் 40% வரை கமிஷன் கேட்டு மிரட்டுவதாக கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து உடுப்பியில் உள்ள ஒரு விடுதியில் சந்தோஷ் பாட்டீல் உடல் சடலமாக மீட்கப்பட்டது. உடல் அருகில் விஷ மருந்து பாட்டில் ஒன்றும் கிடந்ததாகவும் எனவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
தனது இறப்புக்கு அமைச்சர் ஈஸ்வரப்பதான் காரணம் என சந்தோஷ் பாட்டீல் எழுதியிருந்த கடிதமும் சிக்கியதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இவ்விவகாரத்தில் ஈஸ்வரப்பா பதவி விலக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. ஆனால் தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் எனவே ராஜினாமா செய்ய முடியாது என்றும் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்
இதையும் படிக்க: சென்னை: தானாகவே சிக்கிக் கொண்ட கள்ள நோட்டு கும்பல் - நடந்தது என்ன? சுவாரஸ்ய தொகுப்பு