பஞ்சாபை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. அந்த மாநிலத்தில் தற்போது முதல்வராக பதவி வகித்து வரும் பூபேஷ் பாகேலை நீக்கிவிட்டு சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோவை முதலமைச்சராக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்குள் குரல்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பூபேஷ் பாகேல் அண்மையில் டெல்லி சென்று கட்சித் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கட்சித் தலைமையே தன்னை முதலமைச்சராக்கியதாகவும், தலைமை கேட்டுக்கொண்டால் பதவி விலகத் தயார் என்றும் அவர் கூறி வருகிறார். அவருக்கு எதிராக கிளம்பியிருக்கும் டி.எஸ் சிங் தியோவோ காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோதே முதலமைச்சர் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்த்ததாகவும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்ற சமாதானத்தின் அடிப்படையிலேயே சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார்.