காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச தயாராக உள்ளதாக பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பார்வையாளராக மட்டுமே இருந்து வந்த இந்தியா, கடந்த 2017ம் உறுப்பினராக இணைந்தது. இதையடுத்து இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜகிஸ்தான், உஸ்பெஸ்கிதான், பாகிஸ்தானை ஆகிய எட்டு நாடுகள் ஷாங்காய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. உறுப்பினராக பொறுப்பேற்றவுடன் இந்தியா, இம்மாநாட்டில் கலந்து கொள்வது இது 3வது முறையாகும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு ஜூன் 13-14 தேதிகளில் கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் போது, இம்ரான் கான், பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு ஏதும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேச தயாராக உள்ளதாக பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார். அதில், 2-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது தான் இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் ஒரே தீர்வு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் பிரச்னை உள்பட அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேசி தீர்வு காண தயாராக இருப்பதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.