இந்தியா - சீனா இடையே ராணுவ அதிகாரிகள் அளவில் நடைபெற்ற 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இருதரப்பும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் லடாக்கின் எல்லையில் பகுதியில் துருப்புகளை விலக்கிகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. இந்தியா- சீனா இடையே ராணுவ அளவிலான 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. 12 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேச்சுவார்த்தையை தொடர்வது என இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு தலைவர்கள் அளவில் ஏற்றுக்கொண்டவற்றை செயல்படுத்த இருதரப்பும் உறுதிப்பூண்டு இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் படைகளை விலக்கிக்கொள்வது குறித்து ஒப்பந்தத்தை விரைவில் எட்டுவது எனவும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.