2019ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் (ஐஎம்எப்) கணித்துள்ளது.
பன்னாட்டு நிதியம்(ஐ.எம்.எப்) உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி 3.2 சதவிகிதமாக இருக்கும் என கணித்துள்ளது. அதேபோல 2020ஆம் ஆண்டு உலக பொருளாதாரம் 3.5 சதவிகிதமாக வளரும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஐ.எம்.எப் கணிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தக் கணிப்பின்படி நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. அதேசமயம் அடுத்த ஆண்டு இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவில் மந்தமாக இருக்கும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேவை ஆகியவையே காரணமாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்திய பொருளாதாரம் தான் என்று ஐஎம்.எப் தெரிவித்துள்ளது.
ஏனென்றால் சீனாவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை மற்றும் பொருளாதார சிக்கல்கள் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தடுத்து வருகிறது. எனவே சீனாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 6.2 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2020ஆம் ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.0 சதவிகிதமாக குறையும் என்று ஐ.எம்.எப் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.