பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்கு பதியுங்கள் -பிரதமருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்

பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்கு பதியுங்கள் -பிரதமருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்
பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்கு பதியுங்கள் -பிரதமருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்
Published on

யோகா குரு பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அலோபதி மருத்துவம் குறித்தும் கொரோனா தடுப்பூசி குறித்தும் பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளானது. அவரது பேச்சுக்கு இந்திய மருத்துவக் சங்கம் (ஐஎம்ஏ) கடும் கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற்று, தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் மீது தேசத் துரோக குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த சங்கம் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''கொரோனா தடுப்பூசி கடுமையான பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கிறது என்பது நன்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  தீவிர கொரோனா பாதிப்புக்கு இடையே, 10 லட்சத்துக்கும் அதிகமான நவீன மருத்துவமுறை மருத்துவர்கள், தங்களின் நலனைக் கருதாமல் முன்களப் பணியை ஆற்றி வருகின்றனர். இந்த சேவையையும், மருத்துவ முறையையும் முட்டாள்தனமானது என்று விமர்சிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

தங்கள் நிறுவனத்தின் பொருள்களை விளம்பரப்படுத்துவதற்காக கொரோனா பாதிப்புக்கான இந்திய அரசின் சிகிச்சை நடைமுறைகளுக்கு சவால் விடும் வகையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சிகள் தெளிவான தேசத் துரோக குற்றம் என்பது எங்களுடைய கருத்து. இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக தேசத் துரோக குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் ஐஎம்ஏ வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், சர்ச்சை பேச்சு தொடர்பாக யோகா குரு பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இல்லையெனில் ரூ. 1,000 கோடி நஷ்ட ஈடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com