நாடு முழுவதும் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவக் கவுன்சிலானது, நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் தற்போது மருத்துவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா ஒன்றினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. புதிய மசோதாவின்படி கவுன்சிலின் நிர்வாகத்தில் அரசு நியமிக்கும் நபர்கள் இருப்பார்கள்.
இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று மருத்துவர்கள் சார்பில் ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
இதனிடையே, தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் மக்களவையில் தெரிவித்தார். இதனையடுத்து, தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு எதிரான மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.