கேரளா இப்போது சந்தித்து வரும் பேரழிவுக்கு மனிதத் தவறுதான் காரணம் என்று பிரபல இயற்கை ஆராய்ச்சியாளர் மாதவ் காட்கில் தெரிவித்துள்ளார்.
கோவா தலைநகர் பனாஜியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மாதவ் காட்கில் அளித்துள்ள பேட்டியில், கேரளாவில் ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு கட்டடங்களும், சட்டவிரோத குவாரிகளுமே இந்த நிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். அரசு அமைத்த ஆய்வுக் குழு 2011ல் அளித்த அறிக்கையின்படி, கேரளாவின் பல பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் வருவதால் அவற்றை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டதாகவும், அப்போது மாநில அரசு அதை நிராகரித்து விட்டதாகவும் காட்கில் தெரிவித்துள்ளார்.
கேரளா இப்போது கண்டுள்ள மழையளவு, இதுவரை இல்லாத அளவல்ல என்று கூறியுள்ள காட்கில், ஆனால், வெள்ளப் பெருக்கும், அழிவுகளும் இதுவரை காணாதவை என்று கூறியுள்ளார். சட்டவிரோத குவாரிகள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை கருத்தில் கொண்டால், இது மனிதரால் உருவாக்கப்பட்ட பேரழிவுதான் என்றும் மாதவ் காட்கில் தெரிவித்துள்ளார்.
தங்களது குழு அளித்த அறிக்கையை நிராகரித்து விட்ட நிலையில், இனியாவது சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு தொடங்கி கடைபிடித்தால் அது அறிக்கையை செயல்படுத்தியதாகவே அமையும் என்றும் காட்கில் கூறியுள்ளார்.