குஜராத் தேர்தல், டி20 உலகக்கோப்பை - பரபரப்பான சூதாட்டச் சந்தை.. விறுவிறுப்பான உளவுத்துறை

குஜராத் தேர்தல், டி20 உலகக்கோப்பை - பரபரப்பான சூதாட்டச் சந்தை.. விறுவிறுப்பான உளவுத்துறை
குஜராத் தேர்தல், டி20 உலகக்கோப்பை - பரபரப்பான சூதாட்டச் சந்தை.. விறுவிறுப்பான உளவுத்துறை
Published on

போலீசார் மற்றும் உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பையும் மீறி, குஜராத் சட்டசபை தேர்தல் மற்றும் கிரிக்கெட் உலகக் கோப்பை பந்தயங்கள் மீது சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களிலே விறுவிறுப்பாக சூதாட்டம் நடைபெற்று வருகிறது என்றும், குஜராத் சட்டமன்றத் தேர்தல் மீது மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பந்தயம் கட்டப்பட்டுள்ளது எனவும் உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து ஏற்கனவே பந்தயம் கட்டப்பட்டு வந்தாலும், இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி நடைபெற்றால் பந்தயத் தொகை ஒரு லட்சம் கோடியை தாண்டும் எனவும் கருதப்படுகிறது. இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும் சூதாட்டம் நடைபெற்று வந்தாலும், பந்தயத்தொகை குஜராத் தேர்தலை ஒப்பிடும்போது மிகவும் குறைவு என உளவுத்துறையினர் கணித்துள்ளனர்.

மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் பரபரப்பான கிரிக்கெட் போட்டிகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான சூதாட்டங்கள் நடத்திய பலரை கடந்த வருடங்களில் போலீசார் கைது செய்துள்ளனர். லேப்டாப் கணினிகள், கைப்பேசிகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹவாலா முறைகேட்டில் ஈடுபடுபவர்களின் ஒத்துழைப்புடன் இத்தகைய சட்டவிரோத சூதாட்டங்கள் நடைபெறுகிறது என்பது உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான சூதாட்டம் நடைபெற்றதாக சென்னையிலும் பல்வேறு விசாரணைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குஜராத் தேர்தல் சூதாட்ட சந்தைக்கு விறுவிறுப்பான பந்தயங்களை கட்டுவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் என்று பெரும்பாலான பந்தயங்கள் கட்டப்படுகின்றன. ஆகவே பாஜக வெற்றி பெறும் என பந்தயமாக கட்டப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும், 20 பைசா முதல் 60 பைசா வரை வெற்றித்தொகையாக அகமதாபாதில் சூதாட்டம் நடத்துபவர்கள் நிர்ணயத்துள்ளனர். தற்போது அந்த மாநிலத்தில் ஆட்சி செய்துவரும் பாரதிய ஜனதா கட்சி எத்தனை இடங்களை பெறும் என பந்தயம் கட்டுவதை பொருத்து சூதாட்ட வெற்றித்தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என கருதப்படுவதால், அந்தக் கட்சி வெற்றி பெறும் என கட்டப்படும் ஒரு ரூபாய்க்கு 40 பைசா முதல் ஒரு ரூபாய் 20 பைசா வரை வெற்றித்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெறும் என பெரிதாக பந்தயம் கட்டப்படவில்லை என அகமதாபாத் நகரிலிருந்து வெளிவரும் தகவல்களில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி மாநிலங்களின் போலீசார் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆன்லைன் மூலம் சூதாட்டம் நடைபெறுவதால், கையும் களவுமாக இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை பிடிப்பதில் சிக்கல்கள் உள்ளதாக போலீசார் கருதுகின்றனர். லேப்டாப் கணினிகள் மற்றும் கைபேசிகள் ஆகியவற்றை எளிதாக மறைத்து சூதாட்டம் நடைபெறுவதாக உளவுத்துறையினர் தகவல் அளித்துள்ளனர். முன்பு துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நடத்தப்பட்ட சூதாட்டங்கள் தற்போது மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் இருந்து நடத்தப்படுகிறது என உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கருத்துக்கணிப்புகளிலே பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாலும் சூதாட்டசந்தை அதையே கருதுவதாலும், இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெறும் என கட்டப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அதே தொகை பந்தயத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அந்த கட்சி 30 இடங்களை பெறும் என பந்தயம் கட்டப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும், பந்தய தொகையாக ஒரு ரூபாய் 30 பைசா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர். குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சியை தற்போது ஆட்சியில் உள்ளது. மீண்டும் அந்தக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது என கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com