கேரளாவில் கால்நடை மருத்துவமனைக்கு ஒருவர் ‘மெகா’ சைஸ் ஓணானை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்த சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கேரள மாநிலத்தில் ஜிதின் என்பவர் செல்லப் பிராணியாக இகுவானாவை (iguana) வளர்த்து வருகிறார். இது ஒருவகையான ஓணான். இந்தப் பல்லியின் மேல் தாடையில் ஏற்பட்ட அதிகப்படியான சதை வளர்ச்சியால் உணவை எடுத்துக்கொள்வது கடினமாக இருந்தது. ஐந்து வயது ஆண் இகுவானாவை அதன் உரிமையாளர் ஓச்சிராவைச் சேர்ந்த ஜிதின் கால்நடை மருத்துவ மையத்திற்கு அழைத்து வந்தார்.
இந்நிலையில் இந்தப் பல்லிக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். கால்நடை மருத்துவர் அஜித் பிள்ளை தலைமையில், கால்நடை மருத்துவர்கள் அஜித் பாபு மற்றும் ராஜு ஆகியோர் அடங்கிய குழு இந்த அறுவை சிகிச்சையை நடத்தியுள்ளது. அதன் மூலம் அதன் தாடையில் நீண்டிருந்த சதையை அகற்றியுள்ளனர்.
இந்த வகையான ஓணான்கள் பெரும்பாலும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன. இந்த வகையான இகுவானாக்களை செல்லப்பிராணி பிரியர்கள் அதிகம் விரும்பி வளர்கின்றனர். ஏனென்றால் இவை மிகவும் புத்திசாலித்தனமான செல்லப்பிராணிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. பல வகையான ஊர்வனவற்றைப் போலல்லாமல், இவை அவற்றின் உரிமையாளர்களை மிக எளிதாக அடையாளம் காணும் திறன் கொண்டவை. மேலும் அவை மிகவும் பாசமாக இருக்கின்றன.
இந்த இகுவானாவை ஜிதின் எர்ணாகுளத்திலிருந்து நான்கு மாத குட்டியாக வாங்கி வளர்த்து வருகிறார். இந்த அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் அஜித், "இந்த இகுவானா தாவரவகையை சார்ந்தது. எல்லா நேரத்திலும் மிகவும் அமைதியாகவும் நட்பாகவும் இருக்கும். கேரட், வண்ண மலர்கள், செடி, கீரை ஆகியவை இதன் முக்கிய உணவாகும். 1.5 மீட்டர் நீளமுள்ள இந்தப் பிராணி சந்தையில் லட்சம் ரூபாய் மதிப்புடையது ”என்று கூறியுள்ளார்.