காஷ்மீர் மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து தரும் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370 பிரிவை திரும்ப பெற்றால், இந்தியா உடனான உறவு முடிந்து போகும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்கிறது. 1949-இல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 21 பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது. ‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த சட்டப்பிரிவின் கீழ் வருகிறது.
இந்நிலையில், ‘370 சட்டப்பிரிவு காரணமாக வெளிமாநிலத்தவர் ஜம்மு-காஷ்மீரில் முதலீடு செய்ய முடியவில்லை. அதனால் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது’ என்று அருண் ஜெட்லி சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அருண் ஜெட்லியின் இந்த கருத்துக்கு தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், 370 பிரிவை திரும்ப பெற்றால், இந்தியா உடனான உறவு முடிந்து போகும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். “ஜெட்லி ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவு எளிதான விஷயமல்ல நீங்கள் சொல்வது. சட்டப்பிரிவு 370ஐ நீங்கள் நீக்கினால், மத்திய அரசுடனான உறவை முடித்துக் கொள்வோம். அந்த சட்டப்பிரிவுதான் மத்திய அரசுக்கும், ஜம்மு-காஷ்மீருக்கும் இடையிலான பாலம். இந்தியா எங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி இணைத்துக் கொண்டது. தற்போது, அதனை திரும்பபெற நினைத்தால் வேறு வழியில்லை” என்று கூறியுள்ளார்.