கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் கிட் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளை வெகுவாக பாதித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1623 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 662 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை விரைவில் கண்டறிய சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவியை பல நாடுகள் வாங்கியுள்ளன. இதனிடையே ரேபிட் டெஸ்ட் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டை கொண்டு இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டது. மேலும், ரேபிட் டெஸ்ட் கிட்டை மீண்டும் பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநில அரசுகள் கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் எனவும் கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.